Thursday, March 20, 2014

இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு; கொழுத்தவனுக்குக் கொள்ளைக் கொடு

ஆனால் இளைத்த உடல் பருக்க, பருத்த உடல் இளைக்க, இன்றைக்கு functional foods-எனும் போர்வையில் உணவுச்சந்தையில் பெருகி இருக்கும் உணவுகளைக் கணக்கிட முடியாது. தொப்பையையும் தொடையையும் கிராபிக்ஸில் சுருக்கிக் காண்பித்து வலைவீசும் இவர்கள் பிடியில் ஏராளமான சோம்பேறிகள், சிலகாலம் வயிற்றையும், பலகாலம் தங்கள் மணிபர்ஸையும் மெலிய வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

சின்ன குழந்தைகள் குண்டாவதற்கு அதிக பால் உணவுகள் மிக முக்கியக் காரணம். பால் உணவல்ல. மருந்தாய் மட்டும் பயன்படுத்தக் கூடியது. ஆனால், பால் ஒரு வெள்ளை காசு என கண்டறிந்த மேர்கத்திய விஞ்ஞானம், அதன் வியாபாரத்தைக் கொழிக்க வைக்க, வழக்கம் போல் விஞ்ஞானிகள் மூலம் தனக்கு வேண்டிய சான்றுகளை மட்டும் அள்ளித் தெளித்தது. ”வெள்ளைக்காரன் சொல்லிட்டால் வேதமாச்சே!,” என்ற நம் பாட்டன் மூன்றாம் விதிப்படி, பால் அதிகம் பழக்கமில்லாத நம் மரபு, பாலை உன்னத உணவாக்கி விட்டது. “அதிக பால் உடல் எடையை அதிகரிக்கும்.  நுரையீரலில் சளி சேர்க்கும்.”- என நம் முன்னோர் சொன்னதை மறந்து போக ஆரம்பித்தோம்.

போதாக் குறைக்கு, பாக்கெட்டில் வரும் பல மாட்டின் கலப்பு பதனப்படுத்தப்பட்ட பாலில் உள்ள புரதம் ஒரு வேளை சர்க்கரை வியாதி தருமோ என்ற ஆய்வு நம்ம் ஊரிலேயே நடக்கிறதாம். அதிகம் பால் சாப்பிட்டால் அத்திரோஸ்கிளீரோசிஸ் எனும் இரத்த நாள கொழுப்புப் படிதல் வருமோ? என்ற கவலை வேறு அதிகரித்து வருகிறதாம். இதுக்குப் பின்னரும், ”இந்த பாலைக் குடிக்கலை..அப்புறம்?”-என் உங்கள் குழந்தையை குச்சிக் கம்பை வைத்து மிரட்ட வேண்டாம். புத்திசாலி அவன்.ஆரோக்கியமாய் இருக்கட்டும். ”அப்புறம் கால்சியத்துக்கு நாங்க எங்க போவது?” என்போருக்கு- நிறைய கீரை, மோர் போதும்; பல நேரம் மோரின் கால்சியம் பாலின் கால்சிய அளவைவிட அதிகம். கூடவே இலவச இணைப்பாக லாக்டோபாசிலஸ் முதலான பல உடலுக்கு நலம் பயக்கும் நுண்ணுயிரிகளும் மோரில் உண்டு. கிடைத்தால் பிராக்கோலி, சோயா பன்னீரும் சேர்க்கலாம்.

பால், இனிப்புப் பொருள், கிழங்கு, பட்டை தீட்டிய பச்சரிசி இவற்றை மறக்காமல், தொப்பையை மறைக்க முடியாது. பட்டை தீட்டிய கோதுமை மாவில் செய்த பர்கர் ரொட்டிகள், டிரான்ஸ்ஃபேட் எனும் கெட்ட கொழுப்பு நிறைந்த பிட்சா, ஃபிங்கர் பிரைஸ் எனும் உருளைக் கிழங்கு சிப்ஸ், குளிர் பானங்கள், வெள்ளை சர்க்கரை, பிராய்லர் கோழி, எண்ணெயில் பொரித்த நொறுக்குத் தீனிகள் இவற்றை எல்லாம் தவிர்த்து, தினசரி 45 நிமிட நடைப்பயிற்சியும், 20 நிமிட மூச்சுப் பயிற்சியும் செய்தால், காசு பணம் செலவழிக்காமல், இரைப்பை- குடல் பகுதிகளை அறுத்து நீக்காமல், வயிற்றுக் கொழுப்பை உறிஞ்சி எடுத்துப் போடாமல் உடல் எடையைக் குறைக்க உதவும்.
சமையலில் இப்போது நாம் பயன்படுத்தும் புளி, ஆப்ரிக்க சூடான் நாட்டில் இருந்து நாம் சுட்ட புளி.  குடம்புளி (அல்லது கோக்கம் புளி) எனும் Garcinea campogea, தான் நம்ம ஊர் பழைய புளி என வாதிடுவோர் தாவர உலகில் உண்டு.. 

இந்த குடம்புளி உடல் எடையைக் குறைக்க தன்னுள்ளே ’ஹைட்ராக்சி சிட்ரேட்’ எனும் பொருளைக் கொண்டுள்ளதாம். விஷயம் தெரிந்த ஹெயின்ஸ் முதலான பல ஸ்குவாஷ் கம்பெனிக்கார்ர்கள் இந்த குடம் புளியை, அது ஏராள்மாய் விளையும் நம்ம மலபார்-கொங்கன் பகுதியில் இருந்து வெளி நாடுகளுக்குக் கப்பலேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதே, எடை குறைக்க உதவும் ஹைட்ராக்ஸி சிட்ரேட் கொஞ்சமாய் உள்ள இன்னொரு உணவு நம்ம ஊர் ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா கீரை(புளிச்ச கீரை).
எடை குறைக்க நார் உணவு மிக அவசியம். மரக்கறிக்காரர்களுக்கு நார் பொருள் கிடைப்பது பெரும்பாலும் கீரையிலும் பழத்துண்டிலும் இருந்துதான். “கீரையை ஆய்ந்து செய்ய நேரமில்லை; பழத்தை கடித்து சாப்பிடக் கஷ்டம்” என சாக்கு போக்கு சொல்வோருக்கு, ஒரு நாளைக்குத் தேவையான 25கிராம் நார்ப்பொருள் கிடைக்காததால், உள்ளே வெளியே இரண்டு பக்கமும் கொழுப்பு சேரும். தினசரி வெந்தயம் 2 ஸ்பூன் காலை மாலை சாப்பிடுவது உடலை மெலிய வைக்கும். வெந்தயத்தின் நார்ப் பொருளும் அதிலுள்ள சப்போனின்களும் இரத்தக் குழாயின் உள் சேரும் இரத்தக் கொழுப்பையும் டிரை கிளிசரைடையும் குறைய வைக்கும் என பல ப்ல்கலைக்கழக ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. கூடவே, “எனக்கு சுகர் வந்திருச்சா? வரலையா? தெரியலையப்பா” என நாயகன் கமல் மாதிரி தலை சொறிந்து பதற்றத்துடன் இருக்கும் ஐ.ஜி.டி(IGT), நபர்களுக்கு வெந்தயம் சுகர் வரவைத் ’தள்ளிப்போடும் விசேஷம்’.


”பால் சாப்பிடக் கூடாது; இனிப்பு வேண்டாம்..வேற என்ன சார் காலையில் குடிப்பது? என்போருக்கு, ஆவாரை டீ  நாம் மறந்து போன ஒரு அருமையான பாரம்பரிய பானம். ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ? என்று முது மொழியொன்று நம்ம ஊரில வழக்கத்தில் உண்டு. “ரோசாப்பூ, ஆர்க்கிட் பூ” மாதிரி இதுக்கு, மலர் மார்க்கெட்டில் மவுசு இல்லை என்றாலும், இன்னும் கொஞ்ச நாளில் இதன் சந்தைக்கு பெரும் அடிதடி வரப்போவது உறுதி.

ஆரம்பக்கட்ட சர்க்கரை நோயில், இந்த மலர் தரும் மருத்துவத்தினால், பலர் பயனடைவதை ஆரம்பக்கட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. ”ஆவாரை கொன்றை நாவல் அலைகடல் முத்தங் கோஷ்டம் மேவிய மருத்த் தோல்,”- என ஏழு தாவரங்களைக் கொண்டு டீ போட்டு குடித்தால், ”காவிரி நீரும் வற்றும்; கடல் நீரும் வற்றும்” என பரிபாஷையில் சித்தன் சொன்ன சூத்திரத்தை கட்டவிழ்த்துப் பார்த்த விஞ்ஞானிகள், இனிப்பு நீரான(காவிரி நீர்) சர்க்கரை வியாதிக்கும், உப்பு நீரான(கடல் நீர்) சிறுநீரகக் கோளாறில் புரதம் கழிந்து வரும் நீருக்கும், இந்த ஆவாரை காபி ஒரு அரு மருந்து எனபதைக் கண்டறிந்துள்ளது.
பழசுக்கு எப்போதும் பளபளப்பு விலாசம் கிடையாது. பகட்டான விளம்பரமும் கிடையாது. பக்குவமாய் பேசி மயக்கவும் தெரியாது. ஆனால் பல நேரங்களில் பழமை நம்மைப் பாதுக்காக்கும் அன்னைமனம் கொண்ட்து.

No comments:

Post a Comment